புதுடில்லி: கொரோனா வைரஸ் தொற்றால் நாடு முழுவதும் 425 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 பேர் உயிரிழந்துள்ளனர். 24 பேர் குணமாகியுள்ளனர். உலகம் முழுவதும் இதன் பாதிப்பால் 3 லட்சத்து 30 ஆயிரத்துக்கு மேல் பாதிப்படைந்துள்ளனர். அதில் 14,704 பேர் உயிரிழந்துள்ளனர். 99,014 குணம் அடைந்துள்ளனர். இந்நோய் பரவலை தவிர்க்கும் வகையில், சப்ரீம் கோர்ட் நீதிபதி அவசர வழக்குகளுக்காக மட்டும் காணொலி மூலமாக விசாரணை நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பாப்தே கூறியதாவது: "வழக்கு விசாரணைக்காக வழக்கறிஞர்கள், சுப்ரீம் கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டாம். மறுஉத்தரவு வரும் வரை இதேநிலை தொடரும். வழக்கறிஞர்கள் அறைகளை இன்று மாலை 5மணியுடன் மூட வேண்டும். கோர்ட் வளாகத்தில் வழக்கறிஞர்களுக்கு அனுமதி இல்லை. அவசர வழக்குகளுக்காக மட்டுமே, வீடியோ காணொலி மூலமாக வீட்டிலிருந்தே வழக்கறிஞர்கள் வாதிடலாம்." இவ்வாறு அவர் தெரிவித்தார்.